வெள்ளி, 18 ஜனவரி, 2013

இருக்கையின் நான்காவது கால்



எச்சரிக்கை: இங்கு நான் சொல்லப் போவது சமூகத்தின் நான்காவது தூணைப் பற்றிக் கூட இருக்கலாம்.

புகைப் படம் எடுக்க ஸ்டுடியோவிற்கு போயிருக்கிறீர்களா?

புகைப் படக் கருவியான கேமிராவை ஒரு உயரமான முக்காலியின் மீது வைத்திருப்பார்கள். காரணம் என்ன?

ஏன் அந்த ஸ்டாண்டில் நான்காவதாக ஒரு கால் இல்லை?

எந்த இருக்கையில் சவுகரியமாக அமர்வீர்கள். முக்காலியா அல்லது நாற்காலியா?

ஏன் கேமிரா ஸ்டாண்டிற்கு மட்டும் மூன்றே மூன்று கால்கள்?

சிங்க குழுமத்தின் வளர்பருவத்திற்கான திறன் பயிற்சிப் பட்டறைக்குச் சென்றிருந்தேன். மாணவர்களின் வளர்பருவத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப திறன்களை வளர்க்க பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப் படுகிறது. அந்த பயிற்சியில் ஒரு பகுதியாக மூன்று கால் கொண்ட இருக்கையின் குணங்களைப் பற்றி அலசப்படுகிறது. முக்கியமாக மூன்று கால் கொண்ட இருக்கையின் ஒவ்வொரு காலும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு கால் இல்லையென்றால் இருக்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது.

மூன்று கால் இருக்கை தன்னம்பிக்கையின் வடிவமாகக் கருதப்படுகிறது. திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், தன்னையும் பிறரையும் மதித்தல், சமூகத்தில் பொறுப்பாக நடந்து கொள்ளுதல் ஆகியவை மூன்று கால்களாக சுட்டி காட்டப் படுகிறது.

பயிற்சியின் இறுதியில் நமது முக்கியமான கேள்வி எழுப்பப் படுகிறது.

இந்த இருக்கையில் நான்காவதாக ஒரு காலை சேர்த்துக் கொள்ளத் தயாரா?

நன்றாக கவனியுங்கள். மூன்று கால் கொண்ட இருக்கையின் சமநிலை நான்காவது ஒரு காலை சேர்த்தால் பாதிக்கப்படும் சூழல் உண்டு.அதாவது நான்காவது கால் குட்டையாக இருந்தாலோ, அல்லது தளம் மேடு பள்ளமாக இருந்தாலோ, நான்காவது காலினால்தான் சமநிலை பாதிக்கப்படும்.
மூன்று கால் மட்டும் இருக்கும்போது இந்த பிரச்சினை இல்லை. ஒரு கால் குட்டையாக இருந்தாலோ, தளம் மேடு பள்ளமாக இருந்தாலோ மூன்று கால் இருக்கையின் சமநிலை பாதிக்கப் படாது.

இது கணிதத்தில் ஒரு முக்கியமான தேற்றம்.

ஒரு கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் எப்போதும் ஒரு தளத்தை நிர்ணயிக்கும்.

இந்த தேற்றத்தை பள்ளிகளில் கற்பிக்கும்போது இந்த விளக்கத்தையும் எடுத்துக் காட்டுகளையும் ஆசிரியர்கள் சொல்லுவதே இல்லை.

இப்போது மீண்டும் அதே கேள்வி. 

நான்காவதாக ஒரு காலை சேர்த்துக் கொள்ளத் தயாரா?

நான்காவது காலிற்குதான் பொறுப்புகள் அதிகம். மற்ற மூன்று கால்களின் சம உயரம் இருந்தால் அதே அளவுதான் தான் இருக்க வேண்டும். அல்லது தளம் மேடு பள்ளமாக இருந்தால் அதற்கேற்ப தனது உயரத்தை சரிபடுத்திக் கொள்ளும் பக்குவமும் பொறுப்பும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இதனை சமூகத்தின் நான்காவது தூண் என்று பெருமையாக சொல்லிக் கொள்பவர்கள் உணர்வார்களா?

1 கருத்து: